கடற்கரையில் மதுபோதையில் தகராறு: மீனவர் உயிரிழப்பு
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. மீனவர் பழனியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திரேஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் பழனி (45), செந்தில்வேலுடன் (30) இன்று காலை கடற்கரையில் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகராறின்போது பழனி, செந்தில்வேலை கீழே தள்ளியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த செந்தில்வேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனியைச் சரமாரியாகக் குத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த பழனி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வடபாகம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து செந்தில்வேலைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிக்கு மனைவியும், இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
