அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்… தூத்துக்குடியில் 3 இளைஞர்கள் கைது!
தூத்துக்குடியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், கையில் அரிவாளுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த வீடியோ பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, வீடியோவில் இடம்பெற்றிருந்த முகிலன் (19), பெரியசாமி என்ற விக்கி (19), சதீஷ்குமார் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
3 பேரும் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களைப் பதிவிடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
