தமிழகத்துக்கு பெருமை... அமெரிக்காவின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 6வது முறையாக இடம்பெற்ற தூத்துக்குடி பேராசிரியர் செல்வம்!
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் செல்வம், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் வெளியிடும் உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் 6-வது முறையாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான பட்டியலில் உலகளவில் 56,663-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் உலகளவில் 1,40,934 ஆராய்ச்சியாளர்களில் 1,253-வது இடத்தையும், இந்திய அளவில் 74-வது இடத்தையும் பேராசிரியர் செல்வம் பெற்றுள்ளார். அனைத்து அறிவியல் துறைகளையும் உள்ளடக்கிய இந்திய தரவரிசையில் 6,922 ஆராய்ச்சியாளர்களில் 1,042-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அளவில் முதல் 0.15 சதவீத ஆராய்ச்சியாளர்களுக்குள் இடம்பிடித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நிலத்தியல் துறையில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
நிலத்தடி நீர்வள ஆய்வு மற்றும் மேலாண்மை, கடலோர நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபாடு, நுண்நெகிழி துகள்களால் ஏற்படும் பாதிப்புகள், கடலோரச் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பேராசிரியர் செல்வம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 5 நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரின் சாதனையைப் பாராட்டி வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
