தமிழகத்தையே உறைய வைத்த தூத்துக்குடி மாணவி படுகொலை வழக்கு: 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

 
தூத்துக்குடி தூத்துக்குடி

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் குற்றவாளியை உறுதி செய்த போலீசார், தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பித்தனர்.

கடந்த மார்ச் 10-ம் தேதி, விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார். மறுநாள் உடல் முழுவதும் காயங்களுடன் அந்த மாணவி பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

தூத்துக்குடி மானவி பாலியல் போராட்டம்

கொலையாளி தர்ம முனீஸ்வரன் சிக்கியது எப்படி?

குற்றவாளியைக் கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காத நிலையில், காவல்துறையினர் இரு முக்கிய ஆதாரங்களைக் கையில் எடுத்தனர்: சம்பவ இடத்திற்கு அருகே இருந்த காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றது தெரிந்தது. அந்த வாகனத்தின் எண்ணை ஆய்வு செய்ததில், அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரியவந்தது.

உயிரிழந்த மாணவியின் நகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தசைச் சிதறல்களின் டிஎன்ஏ மாதிரியும், சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரின் டிஎன்ஏ மாதிரியும் 100% ஒத்துப்போனது. இந்தத் தீர்க்கமான ஆதாரத்தின் அடிப்படையில், தர்ம முனீஸ்வரன் தான் கொலையாளி என்பதைப் போலீசார் உறுதி செய்து அவரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி

வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் தலைமையிலான குழுவினர், விசாரணை தொடங்கி 20 நாட்களுக்குள்ளேயே முழுமையான குற்றப்பத்திரிகையைத் தயார் செய்தனர். இன்று அந்த ஆவணம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் நாளை மறுநாள் (ஏப்ரல் 2) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது அவரிடம் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படும். மிகக் குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.