இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ, புகைப்படம்... தூத்துக்குடியில் 2 இளைஞர்கள் கைது!
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரிவாளுடன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட ஆனந்த்
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமிபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் (21) என்பவர் அரிவாளுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல், புதியம்புத்தூர் அருகே உள்ள புதுப்பச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கவாஸ்கர் (24), அரிவாளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
