“பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்குதல்... கணவர் உள்பட 3 பேருக்கு 5 ஆண்டு சிறை”!
தூத்துக்குடி அருகே மனைவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கிய வழக்கில், கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தருவைக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (46). இவரது மனைவி குறியீஸ்வரி (35). மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக முருகன், அவரது சகோதரர் சண்முகசுந்தரராஜ் (41), தாயார் பூச்சம்மாள் (75) ஆகியோர் சேர்ந்து குறியீஸ்வரியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த தாக்குதலில் குறியீஸ்வரி பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தருவைக்குளம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1-ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, முருகன், சண்முகசுந்தரராஜ் மற்றும் பூச்சம்மாள் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்து தீர்ப்பளித்தார்.இதையடுத்து 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி அருகே நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.
