பெங்களூரு அக்னிபாத் பயிற்சி முகாமில் தூத்துக்குடி இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 
அக்னிவீர் பயிற்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வந்த இந்திய ராணுவத்தின் அக்னிவீர் தீவிரப் பயிற்சியின் போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த கந்தசாமியின் மகன் கொம்புராஜ் (20). அக்னிவீர் தேர்வில் வெற்றி பெற்ற இவர், கடந்த ஜூன் 23ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பயிற்சி மையத்தில் தீவிர ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அக்னிவீர் ராணுவ  உடற்தகுதி

வழக்கமான தீவிரப் பயிற்சியின் போது கொம்புராஜ் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் உடற்கூறாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொம்புராஜின் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான நாகம்பட்டிக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அக்னிவீர்

இச்சம்பவம் குறித்துப் பசுவந்தனை காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், 20 வயதே ஆன இளம் ராணுவப் பயிற்சி வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.