"தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு லாக்கப் மரணம் அல்ல" - காவல்துறை விளக்கம்!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறையினர் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலம் "காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாக"ப் பேசும் வாக்குமூல வீடியோ பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் காவல் துறை தனது தரப்பு நியாயத்தைத் தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இளைஞர் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலத்தின் தலையில் ஏற்கனவே காயம் மற்றும் கட்டி இருந்ததாகவும், காவல்துறையினர் அவரை எந்தவிதமான தாக்குதலுக்கும் ஆட்படுத்தவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் உயிரிழப்பிற்கு காவல்துறையின் அத்துமீறலே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டிப் போராடி வரும் நிலையில், காவல் துறை இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. இச்சம்பவம் காவல் நிலையத்திற்குள் நடந்த தாக்குதலால் ஏற்பட்ட "லாக்கப் மரணம்" அல்ல எனக் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலம் மயங்கி விழுந்ததற்கான உண்மையான மருத்துவக் காரணங்களைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
