சபரிமலை செல்பவர்களே உஷார்... இந்த தவறை செய்தால் உடனடியாக ரூ.5,000 அபராதம்!

 
சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தை முன்னிட்டுப் புனித நதியான பம்பை ஆற்றின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், ஆற்றில் பழைய ஆடைகள் மற்றும் கழிவுகளை வீசுவதற்குத் தடை விதித்துப் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறிப் பம்பை ஆற்றில் துணிகளை வீசும் பக்தர்களுக்கு ரூ. 5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பம்பை நதியில் புனித நீராடிய பிறகு, தாங்கள் அணிந்து வந்த ஆடைகளை ஆற்றிலேயே விட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பம்பை ஆற்றில் தினமும் டன் கணக்கில் துணிகள் கொட்டப்பட்டு ஆற்றின் நீரோட்டமும் தூய்மையும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

பம்பை

இது குறித்து சபரிமலை கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திலீப் கே. கைனிக்கரா பிறப்பித்துள்ள தடை உத்தரவில், பம்பை ஆறு, அதன் துணை நதிகள் மற்றும் நீராடும் படித்துறைகளில் பக்தர்கள் தாங்கள் அணிந்து வரும் ஆடைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை வீசுவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு மற்றும் அதன் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளைக் கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163 மற்றும் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டப் பிரிவுகளின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும். பம்பை டூட்டி மாஜிஸ்திரேட், காவல்துறை சிறப்பு அதிகாரி மற்றும் ரான்னி-பெருநாடு கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆகியோருக்கு இதனைக் கண்காணித்து அபராதம் வசூலிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 279 மற்றும் நீர் மாசுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்படும் அபராதத் தொகை பம்பை மற்றும் சபரிமலை தூய்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பம்பை பம்பா சபரிமலை

அடுத்த இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் குறித்துத் திருவிதாங்கூர் தேவஸ்தானம், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாகக் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனும், பம்பை நதியின் புனிதத்தையும் தூய்மையையும் பாதுகாக்க ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீச வேண்டாம் என ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.