"திமுகவிடம் பார்ட்டி ஃபண்ட் கொடுத்து ஏமாந்தவர்கள் எங்களை அணுகலாம்" - அமைச்சர் நிர்மல்குமார்!

 
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கட்டாய நிதி வசூல் குறித்து மற்றுமொரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திமுக ஆட்சியில் 32 துறைகளையும் உதயநிதியும் சபரீசனும் சரிபாதியாகப் பிரித்து வசூல் வேட்டை நடத்தியதாகத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று மதியம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் 'பார்ட்டி ஃபண்ட்' விவகாரத்தைக் கையில் எடுத்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் முந்தைய திமுக அரசின் மின்துறை செயல்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,  முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த பல்வேறு புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக, தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் கோடிக்கணக்கில் கட்சி நிதி கட்டாயமாக வசூலிக்கப்பட்டது.

இத்தகைய திட்டங்களுக்காகவும், இதர காரியங்களுக்காகவும் திமுகவினரிடம் பார்ட்டி ஃபண்ட் கொடுத்து ஏமாந்து போன தொழில்முனைவோரோ அல்லது பொதுமக்களோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தாராளமாக எங்களை நேரில் அணுகலாம். உங்களிடம் இருந்து ஏமாற்றிப் பிடுங்கப்பட்ட அந்தப் பணத்தை நாங்கள் முறைப்படி முழுமையாகப் பெற்றுத் தருகிறோம்.

தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் எவ்வித நிர்வாகச் சீர்கேடுகளும், மறைமுகக் கட்டணங்களும் இல்லை என்பதை அமைச்சர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார். தவெக ஆட்சியில் 'கட்சி நிதி' என்ற பேச்சிற்கே இடமில்லை. லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தையே முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார்.

இதற்குச் சான்றாக, மின்சார வாரியத்தில் எவ்விதப் பணப் பரிவர்த்தனையோ அல்லது அரசியல் சிபாரிசோ இன்றி, முற்றிலும் தகுதி மற்றும் விதிகளின் அடிப்படையில் மட்டுமே இதுவரை சுமார் 3,000 ஊழியர்களுக்குப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.