“திகார் ஜெயிலுக்குப் போனவங்களுக்கு என்னைப் பேச தகுதியில்லை!” - கனிமொழிக்கு இபிஎஸ் பதிலடி!

 
இபிஎஸ் இபிஎஸ்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்டா மாவட்டமான தஞ்சையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவர் கடுமையாகச் சாடினார்.

அதிமுக-வை விமர்சித்த திமுக எம்.பி. கனிமொழிக்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, "திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னைப்பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தான் திமுக. 1.74 லட்சம் கோடி ரூபாய் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கியவர்கள் அவர்கள்," என ஆவேசமாகப் பேசினார்.

கனிமொழி எடப்பாடி

விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரிப் பிரச்சினை குறித்து அவர் பேசுகையில், "காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குச் சாதகமான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். காவிரி உரிமையை மீட்க நாடாளுமன்றத்தை தொடர்ந்து 37 நாட்கள் முடக்கிய ஒரே கட்சி அதிமுக என்பது வரலாறு."

"விவசாயிகள் அவதிப்படும்போது தங்களை 'டெல்டாக்காரர்' எனச் சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் எங்கே போனார்?" என கேள்வி எழுப்பினார்.

பாஜக-வுடன் அதிமுக வைத்துள்ள கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளித்தார். "திமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி இல்லையா? அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் மதவாத கட்சியா? எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். அதன் பலனாகவே 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்திற்கு 11,600 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது."

கனிமொழி பாலு

தமிழகத்தின் தற்போதைய நிலையை விமர்சித்த அவர், "இன்று தமிழகத்தில் திரவம், சாக்லேட் எனப் பல வடிவங்களில் கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை இந்த அரசு சீரழித்து வருகிறது," எனக் குற்றம் சாட்டினார். மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்க்கவில்லை என்றும், முறையாகக் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். டெல்டா மண்ணில் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது