ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்... தவெக இணைப்பு விழாவில் இட்லி, பொங்கலுடன் காலை உணவு உபசரிப்பு!

 
தவெக இணைப்பு

அதிமுகவில் இருந்து முறைப்படி விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணையும் விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்றிரவு முதலே இரு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மாமல்லபுரத்தில் குவியத் தொடங்கினர்.  ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் திரண்டு வந்ததால், மாமல்லபுரம் மற்றும் பூஞ்சேரி டோல்கேட் பகுதிகள் அதிகாலை முதலே தவெக மற்றும் மாற்றுக்கட்சித் தொண்டர்களின் வருகையால் பரபரப்பாகக் காணப்பட்டது.

க்ஹ்ஃப்ஹ்

விழா நடைபெறும் நட்சத்திர விடுதியின் அருகே உள்ள பிரம்மாண்ட பந்தலில், அதிகாலையிலேயே வந்து சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தவெக சார்பில் சிறப்பான காலை உணவு உபசரிப்பு செய்யப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் சுடச்சுட இட்லி, நெய் பொங்கல், மெதுவடை, சாம்பார் மற்றும் இரண்டு வகையான சட்னிகளுடன் கூடிய பாரம்பரிய காலை உணவு தாராளமாக விநியோகிக்கப்பட்டது.

தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றுச் சென்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அனைவருக்கும் உணவு தடையின்றிச் சென்றடைவதையும் உறுதி செய்யத் தவெகவின் தொண்டர் படையினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் பந்தல் பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியின் முதல் மாநாட்டு பாணியில், மாமல்லபுரத்திற்கு வந்திருந்த தொண்டர்களுக்குக் காலை உணவு மற்றும் குடிநீர் வசதிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டது வந்திருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமர்ந்துள்ள நிலையில், தவெகவில் இணையும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் அடுத்தடுத்துத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.