இன்று இரவு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று இரவு முதல் அடுத்த ஒரு வாரத்திற்குத் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாகச் சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், மலைப் பிரதேசங்களை ஒட்டிய பகுதிகளில் 'வெப்பச் சலனம்' காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் சில பகுதிகளில் லேசான சாரல் மழைக்கு 20% வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
