தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை! ஏப்ரல் 13 வரை நீடிக்கும்!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வரும் வேளையில், வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பல இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகப் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை தென் தமிழகம், வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைக்கான வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும், உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாகவே இருக்கும். எனவே, மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
