குடிநீர் பிரச்சினை குறித்து முறையிடச் சென்றவர் மீது தாக்குதல்? துணை சபாநாயகர் ரவிசங்கர் சர்ச்சை!

 
திருச்சி

 

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக முறையிடச் சென்ற நபர் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

துறையூர் கண்ணபிரான் காலனியில் கடந்த ஒரு வாரமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கரை நேரில் சந்தித்து முறையிடச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கார்த்திக் குமார் தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான காணொளி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் குமார் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கிறது.