வைரல் வீடியோ... கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றி... திக் ,திக் நிமிடங்கள்!

 
புலி


மத்தியப்பிரதேச மாநிலத்தில்  சியோனில் அமைந்துள்ள  கிணற்றில் புலியும் காட்டுப்பன்றியும் தவறி விழுந்து விட்டது. இவை இரண்டும்  மேலே வரமுடியாமல் ஒன்றாக நீந்தி போராடிக்கொண்டிருந்தன. இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதும்  புலிகள் சரணாலய மீட்புக் குழுவினர் கிணற்றிலிருந்து புலியையும் காட்டுப்பன்றியையும் போராடி மீட்டுள்ளனர். நெகிழ்ச்சியான இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி் வருகிறது.  

வனத்துறையினர் வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பதோடு, வேறு ஏதேனும் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டாலும் அவைகளை  பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது குறித்த வீடியோக்களை  ஐ.எப்.எஸ் அதிகாரிகள்  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், கிணற்றில் விழுந்த புலியையும் காட்டுப் பன்றியையும் வனத்துறையினர் போராடி மீட்ட வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில்  மத்தியப்பிரதேச மாநிலம், சியோனியில் உள்ள பென்ச் புலிகள் சரணாலயம் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த வீடியோ குறித்து பென்ச் புலிகள் சரணலாய எக்ஸ் பக்கத்தில்  “ பிபாரியா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு புலியும் ஒரு பன்றியும் தற்செயலாக விழுந்து விட்டன. பென்ச் புலிகள் சரணாலய மீட்புக் குழுவின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி, புலி மற்றும் பன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டன. நிபுணர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கவனிப்புடன், இரண்டு விலங்குகளும் காயமின்றி வெளியே இழுக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டன என பதிவிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோவில், கிணற்றில் தவறி விழுந்த ஒரு புலியும், ஒரு காட்டுப் பன்றியும் மேலே வர முடியாமல் கிணற்றில் சண்டையிடாமல் அமைதியாக நீச்சலடிக்கின்றன.  மீட்புக் குழுவினர் ஒரு கட்டிலையும், ஒரு கூண்டையும் கிரேன் மூலம் கிணற்றுக்குள் கயிறு கட்டி மீட்க முயற்சி செய்கின்றனர். இதில் புலி கூண்டுக்குள் சென்றதும் அதன் கதவை மூடி கிரேன் மூலம் மேலே தூக்குகின்றனர். அதே போல, காட்டுப் பன்றியையும் கட்டிலில் கட்டி மேலே தூக்குகின்றனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.