டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச்சூடு... 3 பேருக்கு அக்டோபர் 31 வரை போலீஸ் காவல்!
மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் அக்டோபர் 31-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையின் ஜூகு பகுதியில் கடந்த அக்டோபர் 18-ந்தேதி நடிகரின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பிய நிலையில், அவரது கார் டிரைவர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர்.இந்த வழக்கில் ரேஹான், ரித்திக் குர்மி, பூல் சிங் ஆகிய 3 பேரை ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் போலீசார் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்கவும், சம்பவத்தின் பின்னணி மற்றும் சதித்திட்டம் குறித்து விசாரிக்கவும் காவல் தேவை என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு செல்போன்களை அழித்ததாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து, அவர்களை அக்டோபர் 31 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
