நீலகிரியில் 2 பேரைக் கொன்ற புலி தப்பியோட்டம் - வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரைக் கொன்ற புலி ஒன்று வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நள்ளிரவில் தப்பிச் சென்றதையடுத்து, அதனைப் பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தப்பியோடியது சுமார் 8 முதல் 10 வயதுடைய ஆண் புலியாகும். வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த அந்தப் புலி, எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தப்பி இடம்பெயர்ந்துள்ளது. தப்பியோடிய புலியைப் பிடிப்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வனத்துறைப் பணியாளர்கள் மற்றும் கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

புலியின் நடமாட்டத்தை இரவிலும் துல்லியமாகக் கண்டறியத் தானியங்கி கேமராக்கள் மற்றும் 3 தெர்மல் ட்ரோன்கள் தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, வனத்துறையினர் அப்பகுதியில் விடிய விடியத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
