சூரத் உயிரியல் பூங்காவில் புலி மீது கல் வீசிய நபர்... பரபரப்பு வீடியோ !

 
puli puli

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா இயற்கை பூங்கா மற்றும் உயிரியல் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் தங்களின் குடும்பத்தினருடன் வந்து விலங்குகளைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்த நிலையில்  மாலை வழக்கம் போல் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்த சமயத்தில், ஒரு அசாதாரணமான சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அங்குள்ள பாதுகாக்கப்பட்ட கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய புலியைக் காண்பதற்காகப் பார்வையாளர்கள் பலர் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென கூண்டிற்குள் இருந்த புலியைக் குறிவைத்து அடுத்தடுத்து கற்களை வீசி எறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த புலி பயந்து கூண்டின் மற்றொரு பகுதிக்கு ஓடிய நிலையில், அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அந்த நபரின் இத்தகைய விபரீதமான செயலைக் கண்டு கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர்.

விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பொதுவெளியில் கல் வீசிய அந்த நபரை அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகப் பிடித்து எச்சரித்தனர். இது குறித்துப் பூங்கா நிர்வாகத்தினர் தற்பொழுது சர்தானா காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர். பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, புலி மீது கல் எறிந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்துப் போலீசார் தற்பொழுது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.