அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - சசிகலா வலியுறுத்தல்!
அதிமுகவின் 55-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள வி.கே.சசிகலா, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மற்றும் விலக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது 55-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதையொட்டி, கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வி.கே.சசிகலா தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் அரசியல் சூழல்களைச் சுட்டிக்காட்டி அவர் இந்த முக்கியக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் நலனுக்காகவும் எதிர்கால வெற்றிக்காகவும் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் விலக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போதைய சூழலில் மீண்டும் ஒன்றிணைவது எப்போது என்ற கேள்சியை எழுப்பியுள்ளார்.

தொண்டர்களின் நலனைக் காக்கவும், இயக்கத்தை மேலும் பலப்படுத்தவும் அதிமுகவினர் அனைவரும் தங்களது தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவிற்குள் உட்கட்சி விவகாரங்களும் நிர்வாக மாற்றங்களும் விவாதிக்கப்பட்டு வரும் தற்போதைய அரசியல் சூழலில், சசிகலாவின் இந்த ஒற்றுமை குறித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
