திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் சஸ்பெண்ட், ஊழியர்கள் டிஸ்மிஸ்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாகப் பணம் வசூலிப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ தமிழக ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகக்கவசம் அணிந்து சாதாரண பக்தர் போலச் சென்று, லஞ்சம் வாங்கியவர்களைத் டிஜிட்டல் ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்து அமைச்சர் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை பேசுபொருளாகி வருகிறது.
புகார்களின் உண்மைத்தன்மையை அறிய நினைத்த அமைச்சர் ரமேஷ், இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் கோயிலுக்குத் தனது அரசு வாகனத்தைப் பயன்படுத்தாமல் சாதாரண காரில் சென்றுள்ளார்: தனது காரைக் கோயிலுக்கு வெளியேயே நிறுத்திவிட்டு, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக டி-சர்ட் மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு, பொதுமக்களோடு பொதுமக்களாகக் கியூ வரிசையில் நின்றார்.

அமைச்சருடன் வந்த அவரது உதவியாளர், "சீக்கிரமாகச் சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும்?" என்று அங்கிருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார். வந்திருப்பது அறநிலையத் துறை அமைச்சர் என்று தெரியாத அர்ச்சகர்கள், ஒரு நபருக்கு தலா ரூ.1,000 வீதம் 4 பேருக்கு மொத்தம் ரூ.4,000 லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.
கையில் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர் தரப்பு, லஞ்சம் கேட்ட அர்ச்சகரின் 'கூகுள் பே' கணக்கிற்கு ரூ.4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியது. பணம் கணக்கிற்கு வந்ததை அர்ச்சகர் உறுதி செய்த அடுத்த கணமே, அமைச்சர் ரமேஷ் தனது முகக்கவசத்தைக் கழற்றித் தான் யார் என்பதை வெளிப்படுத்தினார்.
டிஜிட்டல் ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கியவர்களை அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்ததும், அங்கிருந்த அர்ச்சகர்களும் ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவர்களைக் கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அமைச்சர், கடுமையாக எச்சரித்து விளக்கக் கடிதம் எழுதி வாங்கினார்.
இந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, சண்முகவிலாச மண்டபம் வாயிலில் தரிசனத்திற்காகப் பணம் பெற்ற அர்ச்சகர் அய்யப்பன், மறு உத்தரவு வரும் வரை திருச்செந்தூர் கோயிலுக்குள் பூஜை செய்யத் தடை விதிக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டிற்கு உடந்தையாகச் செயல்பட்ட பாதுகாப்புப் பணியில் இருந்த 2 பாதுகாவலர்கள் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமன்றி, மொட்டை அடிக்கும் முடி காணிக்கை இடத்தில் பக்தர்களிடம் அநியாயமாகப் பணம் கேட்ட குற்றத்திற்காக மேலும் 2 தற்காலிகப் பணியாளர்களும் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ரமேஷ், "இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் எந்தவித மன்னிப்பு கடிதமும் பெறப்படவில்லை; நடந்த சம்பவம் குறித்து விளக்க கடிதம் மட்டுமே கேட்கப்பட்டு, உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முருகப் பெருமானைத் தரிசிக்க வரும் ஏழை எளிய பக்தர்களிடம் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்தவித பாகுபாடும் காட்டப்படாது" எனத் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கை திருச்செந்தூர் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
