திருச்செந்தூர் கோயிலில் விவகாரம்.. விஜய்க்கு எதிராக 5,000 பக்தர்களைத் திரட்டி அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டம் அறிவிப்பு!

 
அனிதா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து, வரும் ஜூலை 22ஆம் தேதி 5,000 பக்தர்களைத் திரட்டிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முன்பகுதியில் அமைந்துள்ள சண்முக விலாச மண்டபத்தில், அண்மையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் இரும்பு கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"இந்த இரும்பு கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது குலதெய்வமான உற்சவ மூர்த்தியைப் பாரம்பரிய முறைப்படி நெருங்கித் தரிசிப்பதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

அனிதா

இந்த இரும்பு கிரில் கேட்டுகளை உடனடியாக அகற்றி, பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தான் ஏற்கனவே கோயில் நிர்வாகத்திடம் முறையான மனு ஒன்றை அளித்திருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்த மனுவின் மீது கோயில் நிர்வாகமோ அல்லது தற்போதைய தவெக அரசோ இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் சாடினார்.

கோயில் நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்துத் தனது அடுத்தகட்ட போராட்டத்தை அவர் அறிவித்துள்ளார். "பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சண்முக விலாச மண்டபத்தில் உள்ள இரும்பு கிரில் கேட்டுகளை உடனடியாக அகற்றாவிட்டால், வரும் ஜூலை 22ஆம் தேதி 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்களை ஒன்றிணைத்துத் திருச்செந்தூரில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.