2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கல்குவாரியில் தள்ளி கொலை! ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கணவர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு மாயமான பெண் தொடர்பான வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், கல்குவாரி குட்டையில் இருந்து மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டாநகரைச் சேர்ந்த மகாராஜா என்பவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமராவதியை கடந்த 2008-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அமராவதி திடீரென மாயமானார். அவரை தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவரது தாய், கடந்த 23-ம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அமராவதியின் கணவர் மகாராஜா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமராவதியை கங்கைகொண்டான் அருகே உள்ள பாப்பான்குளம் பகுதியில் இருக்கும் கல்குவாரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவரை தாக்கி கல்குவாரி குட்டையில் தள்ளியதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து போலீசார் மகாராஜாவை சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடத்தினர். அப்போது அங்கு ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட எலும்புகள் அமராவதியுடையதா என்பதை உறுதி செய்வதற்காக அவை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன. சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, மகாராஜா 2024-ம் ஆண்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், இதை அமராவதி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், அமராவதி மாயமானது தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், ஓராண்டுக்கு பிறகு மகாராஜா போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
