திருப்பதி 2026 பௌர்ணமி கருட சேவை முழு அட்டவணை வெளியீடு! நவம்பர், டிசம்பரில் ரத்து!

 
திருப்பதி திருப்பதி

திருப்பதி திருமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் 'கருட சேவை' மிகவும் பிரசித்தி பெற்ற வைபவமாகும். அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த 2026-ம் ஆண்டு கருட சேவை நடைபெறும் தேதிகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

இந்த ஆண்டின் மே மாதத்தில் மட்டும் இரண்டு முறை பௌர்ணமி கருட சேவை நடைபெற உள்ளது. அதன்படி மே 1-ம் தேதி வெள்ளிக்கிழமையும், மீண்டும் மே 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் கருட சேவை நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஜூன் 29-ம் தேதி திங்கள்கிழமை, ஜூலை 29-ம் தேதி புதன்கிழமை, ஆகஸ்ட் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை மற்றும் அக்டோபர் 26-ம் தேதி திங்கள்கிழமை ஆகிய தினங்களில் பௌர்ணமி கருட சேவை சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் பௌர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று 'கார்த்திகை தீப உற்சவம்' நடைபெறுவதாலும், டிசம்பர் 24-ம் தேதி வியாழக்கிழமை அன்று 'அத்யயனோத்சவம்' விழா நடைபெறுவதாலும் பௌர்ணமி கருட சேவை நடைபெறாது எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி

பௌர்ணமி கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என்பதால், ரத்து செய்யப்பட்ட தேதிகளைக் கவனித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைபவத்தைக் காணத் தனிப்பட்ட டிக்கெட் எதுவும் தேவையில்லை; மாட வீதிகளில் திரளும் பக்தர்கள் அனைவரும் இலவசமாகத் தரிசிக்கலாம்.