திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தல்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் முக்கிய வழித்தடமான அலிபிரி நடைபாதையில் சிறுத்தை ஒன்று நடமாடிய சம்பவம், ஏழுமலையான் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மலைக்குச் செல்லும் அலிபிரி மெட்டு நடைபாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோவில் பகுதிக்கு அருகே, நேற்று இரவு சிறுத்தை ஒன்று திடீரென நடமாடியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்தச் சிறுத்தை, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையின் ஓரப்பகுதியில் உலா வந்ததைக் கண்ட யாத்திரீகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பீதி நிலவியது. தகவலறிந்த உடனே திருப்பதி திருமலை தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு, வனத்துறையினர் அந்தப் பகுதியில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். மேலும், கூண்டுகள் வைப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். பக்தர்கள் அச்சமின்றிப் பயணிப்பதற்காக அலிபிரி நடைபாதை முழுவதும் வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளுடன் தீவிர இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாகச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி தேவஸ்தான அதிகாரிகள் சில முக்கியக் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளனர்.

நடைபாதையில் பக்தர்கள் யாரும் தனியாகவோ அல்லது ஜோடியாகவோ பிரிந்து செல்லக் கூடாது. எப்போதும் 20 முதல் 30 பேர் கொண்ட பெரிய குழுக்களாக மட்டுமே இணைந்து செல்ல வேண்டும். தங்களுடன் வரும் சிறிய குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தனியாக நடக்க விடக் கூடாது. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டோ அல்லது தோள்களில் சுமந்து கொண்டோ மட்டுமே பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
மாலை நேரத்திற்குப் பிறகு நடைபாதையில் பயணிப்பவர்கள் தேவஸ்தான ஊழியர்களின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்புப் படையினரின் துணையோடு மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். திருப்பதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் தேவஸ்தான விதிகளுக்குக் கட்டுப்பட்டு, எச்சரிக்கையுடன் தங்களது பயணத்தைத் தொடருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
