திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.4.24 கோடி!

 
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை முடிவடைந்த பின்னரும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாமி தரிசனம் மற்றும் உண்டியல் காணிக்கை வசூல் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று திருப்பதியில் ஒரே நாளில் மொத்தம் 82,438 பக்தர்கள் ஏழுமலையானை நேரில் தரிசித்துள்ளனர். தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக 39,948 பக்தர்கள் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் இலவச அன்னப்பிரசாதத்தை சுமார் 2.14 லட்சம் பக்தர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.

திருப்பதி திருமலை

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் மூலவருக்குத் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அதன்படி, ஜூன் 17 அன்று ஒருநாளில் மட்டும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சம் எனத் தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது.

மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஆவலோடு வாங்கிச் செல்லும் ஏழுமலையான் லட்டு பிரசாதம் அன்று ஒரே நாளில் மட்டும் 4.16 லட்சம் லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. விடுமுறை நாட்கள் முடிவடைந்தாலும் வாரத்தின் நடுப்பகுதியிலும் பக்தர்களின் கூட்டம் இந்த அளவிற்கு நீடிப்பது திருமலையில் பக்தர்களின் பக்தி அலையைக் காட்டுகிறது.