திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்.... ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு !

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (அக்.7) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.   பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, அக்டோபர் 12, 13, 14 மற்றும் 18, 19, 20 ஆகிய 6 நாட்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். போலி இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பதி திருமலை

இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவமும், புரட்டாசி மாதத்தின் கடைசி வாரமும் ஒரே காலகட்டத்தில் வருவதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக அக்டோபர் 11 முதல் 20-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் சிறப்பு முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சிறப்பு தரிசனங்களும் இந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக TTD தெரிவித்துள்ளது.

மேலும், புரோட்டோகால் வி.ஐ.பி.க்களை தவிர்த்து, அக்டோபர் 10 முதல் 19-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.எனவே, நவராத்திரி பிரம்மோற்சவ காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டுள்ள பக்தர்கள், இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.