நாளை சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்... போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!
நாளை செப்டம்பர் 13ம் தேதி சென்னையில் இந்து தர்மார்த்த சமிதி அமைப்பின் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் புனித திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருக்குடை ஊர்வலம் யானை கவுனி தாண்டும் வரையில் நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை சரியாக 10 மணிக்குச் சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளுடன் இந்தத் திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது.

சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு புறப்படும் இந்த ஊர்வலம் நாளை மதியம் 12:30 மணியளவில் பைராகி மடத்தைச் சென்று அடையும். அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் வால்டாக்ஸ் சாலை வழியாகவும், கவுனி பகுதியைக் கடந்தும், சூளை நெடுஞ்சாலை மற்றும் ஓட்டேரி மேம்பாலம் வழியாகப் பயணம் செய்து இறுதியில் அயனாவரம் காசி விசுவநாதர் கோயிலைச் சென்றடையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர வைபவமான இந்தத் திருக்குடை ஊர்வலத்தைக் காணவும், வெங்கடாஜலபதியின் திருக்குடைகளைத் தரிசிக்கவும் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆன்மீகப் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், ஊர்வலம் செல்லும் பாதைகளில் தகுந்த பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
