திருப்பதி கோயிலில் VIP தரிசனம் ரத்து! அக்.1, 5-ல் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் VIP தரிசனத்தை ரத்து செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.இந்த இரு நாட்களிலும் சாதாரண மற்றும் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் விரைவாகவும் சிரமமின்றியும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIP பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதால், குறிப்பிட்ட நாட்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என TTD நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதிக அளவில் வரும் பக்தர்களின் தரிசன நேரத்தை குறைத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் VIP தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.புரட்டாசி மாதம் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிலையில், விடுமுறை நாட்களும் சேர்வதால் இந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, அக்டோபர் 1 அல்லது 5-ம் தேதிகளில் திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் தரிசன நடைமுறைகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
