திருப்பூர்: ரூ.10,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் பணியிடை நீக்கம்!
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மின் இணைப்பை மாற்றக் கோரிய நதியிடமிருந்து லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி மின் பொறியாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், நத்தக்காட்டுப்பிரிவு பகுதியில் அழகு சாதனப் பொருட்கள் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். தனது நிறுவனத்தின் மின் பயன்பாட்டை வணிகப் பயன்பாட்டில் இருந்து சிறு, குறு தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற அவர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த மின் இணைப்பை மாற்றித் தருவதற்காக உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்து (33) என்பவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், முன்பணமாக ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு, இதுகுறித்துத் திருப்பூர் லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை இசக்கிமுத்துவிடம் பிரகாஷ் வழங்கும்போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். லஞ்ச வழக்கில் கைதான உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்துவைப் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி உத்தரவிட்டுள்ளார்.
