திருப்பூரில் விரைவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம்: இடம் தேர்வு செய்து ஒப்புதல்!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், திருப்பூரில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15-வது நீதிமன்ற அறையை ஒதுக்க முதன்மை மாவட்ட நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது அந்த அறையில் செயல்பட்டு வரும் 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அதே வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள 2-வது அறைக்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றம் அக்டோபர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியதும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும்.
