திருப்பூர் விசைத்தறி தொழிலாளி மீது ஜீப் ஏற்றி கொலை - பேரூராட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை!

 
திருப்பூர் கொலை

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் தார் சாலை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில், விசைத்தறி தொழிலாளியை ஜீப் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் பேரூராட்சி தலைவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் லட்சுமிகார்டன் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பழனிசாமி (57), தனது பகுதியில் தார் சாலை அமைக்கும் இடத்தில் உள்ள சிக்கல் குறித்து பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமியைச் (60) சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது இச்சட்டத்தில் தலையிட வேண்டாம் என்று தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி, பழனிசாமி ஸ்கூட்டரில் சென்றபோது, அவ்வழியாக ஜீப்பில் வந்த பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி அவர் மீது மோதியுள்ளார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனிசாமியின் மகன் சுகுமார் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமியைக் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்.