தக்காளி விலை கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
திருப்பூர்: திருப்பூரில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி தற்போது ரூ.350-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் பல இடங்களில் தக்காளி செடிகள் காய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சில விவசாயிகள் தக்காளி செடிகளை அகற்றி, அடுத்த பருவத்துக்கான பயிர்களை சாகுபடி செய்வதற்காக நிலத்தை தயார் செய்து வருகின்றனர். மேலும் தக்காளி சீசன் முடிவை நெருங்கியுள்ளதால் பல தோட்டங்களில் செடிகளில் போதுமான அளவு பழங்கள் இல்லை.
இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.350 ஆக உயர்ந்துள்ளது.

தக்காளி விலை குறைவாக இருந்த காலத்தில், விவசாயிகளுக்கு கிடைத்த தொகை அறுவடை கூலி மற்றும் சந்தைக்கு கொண்டு செல்லும் வாகன வாடகைக்கே சரியாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது விலை உயர்ந்துள்ள போதிலும், பல தோட்டங்களில் அறுவடை செய்யும் அளவுக்கு தக்காளி இல்லாததால் இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயனளிக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதே நிலை நீடித்து சந்தைக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்தால், வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
