ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது ஆக்சிஜன் தீர்ந்ததா? திருப்பூரில் மேலாளர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த விக்னேஷ் (38) என்பவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரைச் சேர்ந்த விக்னேஷ், சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மான் மோதியதில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று விக்னேஷை ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே விக்னேஷின் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷின் உயிரிழப்புக்கான மருத்துவ காரணம் மற்றும் மருத்துவமனையின் தரப்பில் ஏற்பட்டதாக கூறப்படும் குறைபாடு குறித்து விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.
