மழையால் அழுகும் தக்காளி… சாலையோரம் கொட்டப்படும் அவலம்... விவசாயிகள் வேதனை!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட தக்காளிப் பழங்கள் அழுகி வீணாவதால், விவசாயிகள் அவற்றைச் சாலையோரங்களில் கொட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமரலிங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் தக்காளிச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பழங்களில் பூஞ்சை, வைரஸ் நோய்கள் தாக்குவதால், அறுவடை செய்த இரண்டு நாட்களிலேயே அவை அழுகிவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் சந்தைக்கு வரும் தக்காளிகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தரமான 14 கிலோ தக்காளிப் பெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தக்காளிப் பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. அழுகிய பழங்களை விற்க முடியாததால் விவசாயிகள் அவற்றைச் சந்தை வளாகங்களுக்கு வெளியேயும் சாலையோரங்களிலும் கொட்டிச் செல்கின்றனர்.
