திருத்தணி முருகன் கோயிலில் திடீர் தீ விபத்து! நெய் தீபம் ஏற்றிய இடத்தில் பரபரப்பு

 
thiruthani

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றும் இடத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் மாடவீதியில் உள்ள வேல் மண்டபம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம் உள்ளிட்டவற்றை ஏற்றி வழிபடுவது வழக்கம்.

திருத்தணி

இந்த நிலையில், செப்டம்பர் 29-ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த இடத்தில் நெய் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விளக்குகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால் அங்கு இருந்த பக்தர்கள் அச்சமடைந்து அலறியடித்தபடி அங்கிருந்து விலகினர். அப்போது அருகில் பணியில் இருந்த கோவில் ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குறுகிய நேரத்திலேயே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பக்தர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திருத்தணி

முதற்கட்ட விசாரணையில், தீபம் ஏற்றும் இடத்தில் கற்பூரம் மற்றும் எண்ணெய் அதிக அளவில் இருந்த நிலையில், விளக்குகளில் இருந்து தீ பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீ அணைக்கப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அதே இடத்தில் பக்தர்கள் மீண்டும் நெய் தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.