திருவள்ளூர் அருகே சோகம்: விஷம் குடித்த காதல் தம்பதி அடுத்தடுத்து உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறில் விஷம் அருந்திய காதல் தம்பதி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறில் விபரீத முடிவு
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (29). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (22) என்பவரைக் காதலித்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த யுவராஜ், தனது தந்தை பாஸ்கர் மற்றும் மனைவி மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழப்பு
இதனால் மனமுடைந்த மஞ்சுளா, வீட்டில் இருந்த விஷ மருந்தை அருந்தியுள்ளார். இதையடுத்து யுவராஜும் விஷம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இருவரும் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி திங்கள்கிழமை காலை இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து யுவராஜின் தந்தை அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
