திருவள்ளூர் மருத்துவ மாணவர் தற்கொலை வழக்கில் திருப்பம்; 4 மாணவர்கள் கைது - 'ஃபேக் ஐடி' மோதலில் விபரீதம்!
திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் ஆஷெர் இம்மானுவேல், கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவனின் தற்கொலைக்குத் தூண்டியதாக 4 மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷெர் இம்மானுவேல் (20), திருவள்ளூரில் தங்கி மருத்துவக் கல்வி பயின்று வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி விடுதியின் 5-வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்ததாகக் கூறப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

போலீசாரின் விசாரணையில் முதலில் இது விபத்து என்று கருதப்பட்டாலும், திருவள்ளூர் தாலுகா போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன: கல்லூரியின் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது, யாரோ ஒரு நபர் போலிக் கணக்கு மூலம் தவறான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் போலி கணக்கை ஆஷெர் இம்மானுவேல் தான் பயன்படுத்துகிறார் என்று சந்தேகித்த சக மாணவர்கள் 4 பேர், இது தொடர்பாக அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள், வகுப்பறையிலேயே ஆஷெர் இம்மானுவேலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சக மாணவர்களால் தாக்கப்பட்டதாலும், பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஆஷெர், கல்லூரியின் 5-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
மாணவனின் தந்தை ரகு அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் தாலுகா போலீசார் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆஷெர் இம்மானுவேலைத் தாக்கிய சக மாணவர்கள் நான்கு பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்கால மருத்துவராக வேண்டிய ஒரு இளைஞர், சக மாணவர்களின் தாக்குதலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
