8 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை கோவிலில் மீண்டும் யானை! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

 
யானை

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதான ஆண் யானை புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. ‘ஹீராலால்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த யானையை கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ‘ருக்கு’ என்ற பெண் யானை இருந்தது. பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு செல்வதற்கு முன்பு ருக்குவிடம் ஆசீர்வாதம் பெறுவது வழக்கமாக இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி கோயில் வளாகத்தில் ருக்கு உயிரிழந்தது.

ருக்கு யானை இறந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்த நிலையில், கோயிலுக்கு மீண்டும் யானை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதான ஆண் யானை ‘ஹீராலால்’ நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை வந்தடைந்தது. இந்த யானை சுமார் 6 அடி உயரம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வந்த யானைக்கு ராஜகோபுரம் எதிரே மலர் மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் மூலம் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மலர்கள் தூவி யானை வரவேற்கப்பட்டது. இதையடுத்து யானை லாரி மூலம் கோயில் வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டது. புதிய யானையை காண ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு திரண்டனர்.

அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனத்தில் ஏற்றி இந்த யானை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் தடையின்மைச் சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே யானை இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹீராலால் யானை எதிர்காலத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மாட வீதிகளில் வலம் வருமா அல்லது அதற்கான உரிய பயிற்சிக்குப் பிறகே கோயில் நிகழ்வுகளில் பங்கேற்குமா என்பது பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.