மனைவியிடம் தகராறு செய்ததைத் தட்டிக்கேட்ட உறவினர் அடித்துக் கொலை!
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே, மனைவியிடம் தகராறு செய்ததைத் தட்டிக்கேட்ட உறவினரை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்ததாக செங்கல் சூளைத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் (30), தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வெறையூர் அருகே பெருமணம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். அதே சூளையில் பாண்டியனின் உறவினரான கன்னியப்பன் (36), தனது மனைவி கல்பனாவுடன் பணியாற்றி வந்தார்.
கன்னியப்பன் அவ்வப்போது மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாண்டியன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், பாண்டியனைத் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
