திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடங்கியது... பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார் குவிப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளுக்காக மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 15,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், பக்திப் பெயரில் பக்தர்களிடம் அத்துமீறிப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், நகரின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பக்தர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் சுவாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் ஏதுவாக முக்கிய வீதிகள் மற்றும் மலைப்பாதைகளில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபத் திருவிழாவையொட்டி வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களைக் குறிவைத்துச் சில சமூக விரோதிகள் ஈடுபடும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குவது போல் நடித்துக் கட்டாயப்படுத்திப் பணம் கேட்டு மிரட்டும் செயல்களில் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதைகளில் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் அல்லது எலுமிச்சைப் பழம் போன்றவற்றை வலுக்கட்டாயமாகக் கொடுத்துவிட்டுப் பெருமளவில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.
