திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் சாயரட்சை பூஜை நடைபெற்ற போது, முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் அபிஷேக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் அதிகபட்சம் இருபத்தி ஐந்து பக்தர்கள் சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் அமர வைக்கப்படும் வழக்கத்தின்படி, சென்னையைச் சேர்ந்த பக்தர் ரவிச்சங்கர் (68) என்பவர் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

சுவாமி சன்னதி அபிஷேகம் முடிந்ததும், அங்கிருந்து அம்மன் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்திலும் அவர் பங்கேற்றபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே கோயில் ஊழியர்கள் அவரை மீட்டு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குச் சிகிச்சை பெற்று வந்த ரவிசங்கருக்கு நேற்று அதிகாலை மீண்டும் மூச்சுத்திணறல் அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆண்டும் ஆந்திர மாநில பக்தர் ஒருவர் இதே போன்று அபிஷேகத்தின் போது மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
