திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்குத் தடை!

 
திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அன்றைய தினம் பக்தர்கள் தீப மலை மீது ஏற முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திகழும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் அண்ணாமலையாரைத் தரிசிக்கத் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம்.

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்

வரும் நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழைத் தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருவதால், மலைப்பாதை வழுக்கும் தன்மையுடன் ஆபத்தானதாக மாறியுள்ளது.

மகா தீபத்தன்று வழக்கத்தை விட லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் மலையேற முயலும் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவும், பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தீபம்

இதன் காரணமாக, தீபத் திருவிழா நாளன்று பக்தர்கள் யாரும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை நேரடியாகத் தரிசிக்க அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் சிறப்பாகச் மேற்கொள்வது குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தொடர்ந்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.