திருவண்ணாமலை அக்னி வீரர் நந்தா லடாக்கில் உயிரிழப்பு!
இந்திய-சீன எல்லையான லடாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி வீரர் நந்தா (23) கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்துள்ள கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா.
லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் அக்னி வீரராகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு நிலவிய கடுமையான பனிப்பொழிவால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்னி வீரர் நந்தாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனம் வழியாக அவரது சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, ராணுவத்தினரின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
