திருவண்ணாமலை சாது வேடத்தில் கஞ்சா விற்பனையா? கிரிவலப்பாதையில் போலீஸ் அதிரடி சோதனை!

 
கஞ்சா

 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும், சிலர் அவற்றை விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலப்பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி யாசகம் பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக வரும் சில சாதுக்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவதாகவும், சிலர் அதனை விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தகுளம் அருகே தங்கியிருந்த சாதுக்களிடம் திடீர் சோதனை நடத்தினர்.

சாதுக்கள் வைத்திருந்த பைகள் மற்றும் உடைமைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என போலீசார் சோதனை செய்தனர். மேலும், கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது தெரியவந்தால் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

மேலும், கிரிவலப்பாதையில் புதிதாக வந்து தங்கும் சாதுக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கிரிவலப்பாதை முழுவதும் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிரிவலப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.