திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலில் சுழற்சி முறையில் 2 பணியாளர்கள் நியமனம்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்குப் பிள்ளையார் கோயிலில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் பணிபுரிய 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பௌர்ணமி தினங்களில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக இடுக்குப் பிள்ளையார் கோயில் 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள், கோயிலின் குறுகிய வழியில் பக்தர்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதைக் கண்காணிப்பார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகிய இடுக்கு வழியில் நுழைய முயன்ற உடல் பருமனான இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாகச் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பக்தர்கள் பாதுகாப்பாகத் தரிசனம் செய்வதை உறுதி செய்யக் கோயில் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
