திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோவிலில் மீண்டும் விபரீதம் - குகைக்குள் சிக்கிய இளம்பெண் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்பு!

 
இடுக்கு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்குப் பிள்ளையார் கோவிலில், நேற்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சிக்கி, மூச்சுத்திணறி பலியான அதிர்ச்சி விலகுவதற்குள், இன்று பெண் பக்தை ஒருவர் இடுக்கில் சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் வழிபடும் முக்கிய இடங்களில் இடுக்குப் பிள்ளையார் கோவிலும் ஒன்று: இக்கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 குறுகிய வாசல்கள் உள்ளன. பக்தர்கள் பின்வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்து, கைகளை ஊன்றி மெல்ல நகர்ந்து முன்வாசல் வழியாக வெளியே வர வேண்டும். குகையிலிருந்து வெளியே வந்ததும் அங்கிருக்கும் நந்தி பகவானையும், இடுக்குப் பிள்ளையாரையும் வணங்கினால் நோய்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இடுக்கி பிள்ளையார்

கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன: நேற்று இரவு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் இடுக்குப் பிள்ளையார் கோவில் குகைக்குள் நுழைந்த போது எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொண்டார். வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் நடந்து முடிவதற்குள், இன்று மீண்டும் பெண் பக்தை ஒருவர் அந்த குறுகிய குகைப்பாதையில் சிக்கிக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் அப்பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.

திருவண்ணாமலை

அடுத்தடுத்து பக்தர்கள் சிக்கி ஆபத்தில் மாட்டுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்: உடல் பருமனாக இருப்பவர்கள் மற்றும் மூச்சுத்திணறல், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் இடுக்குப் பிள்ளையார் கோவில் குகைக்குள் செல்லக் கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிடும் எச்சரிக்கைப் பலகையைக் கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக வைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.