திருவண்ணாமலை மாசிப் பௌர்ணமி... கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

 
கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கான அதிகாரப்பூர்வ நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திருவண்ணாமலையில் மலையையே சிவனாகக் கருதி வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வருவது வழக்கம். மாசி மாதப் பௌர்ணமி திதி இன்று, மார்ச் 2ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6.29 மணிக்கு தொடங்குகிறது. நாளை, மார்ச் 3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு பௌர்ணமி நிறைவடைகிறது. எனவே, இன்று மாலை 6.29 மணி முதல் நாளை மாலை 5.52 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான பக்தர்கள் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிரிவலம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துச் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிரிவலப் பாதை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிரிவலப் பாதையில் தடையற்ற குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்

பக்தர்கள் கோவில் நிர்வாகம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, நெரிசலைத் தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாகப் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களைக் கிரிவலப் பாதையில் வீசாமல் சுற்றுப்புறத் தூய்மையைப் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.