திருவண்ணாமலையில் பட்டா வழங்குவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி - வனச்சரகர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில், ஜமுனாமரத்தூர், மேல்பட்டு மற்றும் நாடானூர் வனச்சரகப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வருபவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையைப் பயன்படுத்தி, மலைவாழ் மக்களிடம் சுமார் 30 பேரிடம் ரூ.1 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பட்டா பெறாவிட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் மிரட்டியது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சுதாகர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஜவ்வாதுமலை வனச்சரகர் பிரபு, மேல்பட்டு வனச்சரகர் சுரேஷ், நாடானூர் வனச்சரகர் செங்குட்டுவன், வன அலுவலர்கள் சுப்பிரமணி, அருணகிரி, மற்றும் வனக்காவலர் முத்து ஆகிய 6 பேரும் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து அந்த 6 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபு மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் நிர்வாக ரீதியாகச் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
