திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள், உதவி எண்கள் அறிவிப்பு!

 
திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் நாளை ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. 14 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 27 காலை 9:53 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 28 காலை 10:29 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. நாளை வியாழக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும், வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை கூட்டம் உச்சத்தில் இருக்கும். நெரிசலைத் தவிர்க்க விரும்புபவர்கள் அதிகாலை 3:30 முதல் 4:30 மணிக்குள் கிரிவலத்தைத் தொடங்கி, நண்பகல் வெயில் வருவதற்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கிரிவலம்

பக்தர்கள் எப்போதும் வலப்புறமாக (கடிகார சுற்றுப் பாதையில்) மட்டுமே அருணாசல மலையை வலதுபுறம் வைத்து நடக்க வேண்டும். உட்புறப் பாதைகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகருக்கு வெளியே 120 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரிங் ரோட்டில் மட்டும் 4,725 வாகனங்களை நிறுத்தும் வகையில் 27 இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

தென்னக ரயில்வே சார்பில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு MEMU ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து வருபவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து (பிளாட்பாரம் 7) திருவண்ணாமலை பேருந்துகளைப் பயன்படுத்தலாம்.

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்

பார்க்கிங், ஷட்டில் பேருந்து மற்றும் கூகுள் மேப் வழிகாட்டல்களுக்கு 9363622330 என்ற வாட்ஸ்அப் எண்ணையும், அவசர உதவிக்கு 9159616263 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மழைக்கோட் மற்றும் வழுக்காத செருப்புகளை எடுத்துச் செல்லலாம். உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள போதுமான தண்ணீர் பருகவும். தனியாகச் செல்வதைத் தவிர்த்து குழுவாகச் செல்வது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.